தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவெக மாநாடு பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழப்பு; குடும்பத்தாருக்கு நிவாரண தொகை வழங்கிய அமைச்சர்! - TVK MAANAADU POLICE DEAD

தவெக மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் கார் மோதி உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினரை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ரூ.25 லட்சத்திற்கான நிவாரண தொகை காசோலையை வழங்கினார்.

காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் பொன்முடி
காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் பொன்முடி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 10:53 AM IST

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்தவர் சத்தியமூர்த்தி (27). இவர் கடந்த அக்.26ஆம் தேதி இரவு சுமார் 8.00 மணியளவில் தவெக மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர், அகரம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக கார் ஒன்று மோதிய விபத்தில் பலத்த காயமடைந்துள்ளார். இந்நிலையில், அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அன்று அக்.29ஆம் தேதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த காவலரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும், ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி உயிரிழந்த காவலரின் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்ததுடன் முதலமைச்சர் அறிவித்த ரூ.25 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த காவலரின் மனைவியிடம் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க:தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த இளைஞர்! தொழிற்சாலையினர் பேச்சுவார்த்தை!

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறுகையில், “மாநாட்டின் பாதுகாப்பிற்கு சென்றிருந்த காவலர் உயிரிழந்தது சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இறந்த காவலருக்கு 27 வயது தான் ஆகிறது.

மேலும் அவர், சிறு வயது இளைஞர் கடந்த ஏழு வருடங்களாகத்தான் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்னர் தான் திருமணம் ஆகி ஒரு கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அவருடைய இறப்பு குடும்பத்தில் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு பேரிழப்பாகும்.

தமிழக முதல்வர் அறிவித்த ரூ.25 லட்சத்திற்கான காசோலை அவரது மனையிடம் வழங்கியுள்ளேன். அவருடைய மனைவி M.Sc., Botany படித்துள்ளார். விரைவில் அவருக்கும் அரசு துறையில் பணி வழங்க ஏற்பாடு செய்யப்படும். அவருடைய குடும்பத்திற்கு எந்த ஒரு உதவி வேண்டுமென்றாலும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகலாம். அவர்கள் செய்து தருவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details