சென்னை: டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணையை மேற்கொண்டது. இதற்காக டெல்லியில் இருந்து வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் வி.ராமச்சந்தர், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தின் புலன் விசாரணை, கொலைக்கான சதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவருடைய மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் வி.ராமசந்தர், சம்பவத்தன்று நடந்தவை குறித்து கேட்டறிந்தார். மேலும், காவல்துறையின் விசாரணை குறித்தும் கேட்டறிந்தார்.
சுமார் அரை மணி நேரம் ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் அவர் விவரங்களை கேட்டறிந்த பின்னர், ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்தின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் வி.ராமச்சந்தர் கூறியதாவது, "ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரிடம் பேசினேன். இந்த விவகாரத்தில் காவல்துறை முன்னெச்சரிக்கையாக இல்லை. தமிழ்நாடு காவல்துறை தோல்வி அடைந்து விட்டது. அதேபோல் தற்போது நடைபெற்று வரும் விசாரணை மீது திருப்தி இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரே கொல்லப்படுகிறார். இந்த சம்பவம் குறித்த ஆய்வின் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், பெரம்பூர் வேணுகோபாலசாமி தெருவில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட தேசிய பட்டியல் ஆணையத்தின் உறுப்பினர் வி.ராமசந்தர், சம்பவத்தின் போது எந்த வழியாக வந்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 10 பேரிடம் 5 நாட்கள் தீவிர விசாரணை!