தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்து வட்டி கடனால் இளைஞர் தற்கொலை.. அதிக வட்டிக்கு பணம் கொடுத்த இருவர் கைது! - YOUTH SUICIDE IN TIRUNELVELI

திருநெல்வேலியில் கந்து வட்டி தொல்லையால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட  சக்தி குமரன், வெங்கடேஷ்
கைது செய்யப்பட்ட சக்தி குமரன், வெங்கடேஷ் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2025, 11:00 PM IST

திருநெல்வேலி: சேரன்மகாதேவியில் கந்து வட்டி தொல்லையால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், நெல்லை சேரன்மகாதேவி, புலவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள் (22). ஐடி பாடப்பிரிவில் பிஇ படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், ஆன்லைனில் பணத்தை செலுத்தி டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆன்லைன் கேமிங்கில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இவர் டிரேடிங் செய்ய திருக்குறுங்குடி அருகே உள்ள மாவடி, ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (22), களக்காடு சிதம்பராபுரத்தைச் சேர்ந்த சக்தி குமரன் (28) ஆகியோரிடம் 3 தவணையாக ரூ.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்காக, 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிக வட்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வாரம் ரூ.30,000 வட்டி செலுத்த வேண்டும்.

ஆனால், டிரேடிங்கில் எதிர்பார்த்த வருமானம் வராததால் சிவ பெருமாள் வாங்கிய பணத்தையும், அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார். ஆனால், வட்டிக்கு பணம் கொடுத்த சக்தி குமரன் மற்றும் வெங்கடேஷ் பணத்தை திரும்பக்கேட்டுள்ளனர்.

உயிரிழந்த சிவபெருமாள் (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, சிவபெருமாளை நேரில் அழைத்து பணத்தை குறிப்பிட்ட தேதியில் செலுத்தக்கோரி ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இல்லையென்றால், இருசக்கர வாகனத்தை விட்டுச் செல்லுமாறு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதில், தனது இருசக்கர வாகனத்தை அவர்களிடம் விட்டுவிட்டு சிவபெருமாள் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மனமுடைந்த அவர், கடந்த 11 ஆம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், சிவபெருமாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிவபெருமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க:அண்ணன், தம்பி இருவரையும் ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. ஆவடியில் பயங்கரம்!

இதற்கிடையில், கந்து வட்டி தொடர்பாக சிவபெருமாள் பெற்றோர் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் கந்து வட்டி கேட்டதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்குப்பதிவு செய்து சக்திகுமரன் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 2 பேரை இன்று (ஜனவரி 19) ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வட்டிக்கு விடப்படுவது தெரிந்தே, படித்த இளைஞர்கள் கந்து வட்டி வலையில் சிக்குகின்றனர். இளைஞர்கள் பலர் ஆன்லைன் டிரேடிங் அல்லது ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்டவற்றில் பணத்தை போட்டு, விரைவில் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும் என நினைக்கின்றனர்.

இதற்காக பல லட்சங்களை கடனாக பெற்று, அதனை திரும்ப செலுத்த முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. படித்த இளைஞர்கள் பணம் மீதான ஆசையைத் தூண்டி நடக்கும் மோசடி வலையில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details