தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமாரை குண்டுக்கட்டாக தூக்கிய காவல் துறை! - Kappalur Toll plaza Issue - KAPPALUR TOLL PLAZA ISSUE

Kappalur Toll plaza: கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 2:05 PM IST

மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இந்த நிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதி மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை கைப்பற்றி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பழைய முறையிலேயே உள்ளூர் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திருமங்கலம் டி.எஸ்.பி தலைமையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஜூலை 30ஆம் தேதி (இன்று) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என திருமங்கலம் வணிகர் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் மூன்றாவது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அந்த பேச்சுவார்த்தையின் போது கடந்த 2020ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் மீண்டும் கடைப்பிடிக்கப்படும் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை விலக்கிக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்படும் எனவும், உள்ளூர் வாகனங்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து சுங்கச்சாவடியை கடந்து செல்லலாம் எனவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையிலும் தங்களுக்கு திருப்தி இல்லை எனக்கூறிய திருமங்கலம் வணிக சங்கத்தினர், திட்டமிட்டபடி ஜூலை 30ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என நேற்று அறிவித்திருந்தனர். அதன் படி இன்று திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டக் குழுவினர் கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்ந்து இயங்குவதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வண்ணம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையே மதுரை கப்பலூர் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் கூத்தியார்குண்டு பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டன.

கப்பலூர் சுங்கச்சாவடி அருகே வரக்கூடிய வாகனங்கள் தர்மத்துப்பட்டி வழியாக மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டன. மேலும் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் ஒன்பது பேர் கொண்ட குழு அசம்பாவிதத்தை தடுக்கும் வண்ணம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வீசக்கூடிய வஜ்ரா வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து, அனைவரையும் விருதுநகர் சாலையில் அமைந்துள்ள மேலக்கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:"மகப்பேறு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்பதே அரசின் இலக்கு" - அமைச்சர் மா.சு உறுதி! - minister Subramanian

ABOUT THE AUTHOR

...view details