தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரிடம் மனு கொடுக்கச் சென்ற மேல்மா விவசாயிகள்.. கைது செய்து கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்ட காவல்துறை!

Melma SIPCOT: மேல்மா சிப்காட் திட்டத்தைக் கைவிடக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அளிக்கச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த காவல்துறையினர், இரவு 10 மணிக்கு மேல் கிளாம்பாக்கத்தில் விட்டுச் சென்றதால் அப்பகுதி முழுவதும் பரப்பானது.

Melma SIPCOT
மேல்மா விவசாயிகள் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 8:17 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு 3ஆயிரத்து 173 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 7 மாதங்களாக அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைச் சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 233 நாட்களாக மேல்மா கிராம விவசாயிகள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் பேசும்போது, மேல்மா சிப்காட் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை அவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்று பேசி இருந்தது மேல்மா விவசாயிகளைக் கொந்தளிக்கச் செய்தது.

இதனையடுத்து, அமைச்சர் எ.வ.வேலுவின் சட்டசபை பேச்சிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் பொய் சொல்வதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக சென்னை சென்ற இருபதுக்கும் மேற்பட்ட மேல்மா பகுதி விவசாயிகளைத் தலைமைச் செயலகம் எதிரே வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களைத் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து இரவு 10 மணிக்கு மேல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவர்களை விட்டுச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர் கூறுகையில், "மேல்மா சிப்காட் சட்டத்தைக் கைவிட வலியுறுத்திக் கடந்த 233 நாட்களைக் கடந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த மேல்மா சிப்காட் திட்டத்தால் மேல்மா, மணிப்பூர், குரும்பூர், காட்டுகுடிசை, நெடுங்கல் உள்ளிட்ட 11 கிராம மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எங்கள் பகுதி முழுவதும் ஏரிகளால் நிறைந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முப்போகம் விளைச்சல் தரும் பகுதியாக உள்ளது. இந்த சிப்காட் திட்டத்தின் மூலம் சுமார் 3ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதால் சுமார் 5ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

இவ்வளவு நாட்களாகப் போராடி வரும் எங்கள் மீது தவறான தகவல்களை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து, குண்டர் சட்டம் மூலம் எங்களைக் கைது செய்வதன் மூலம் தமிழக அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்தி வருகிறார். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் விவசாயிகளே இல்லை எனச் சட்டமன்றத்தில் பொய்யாகப் பேசி வருகிறார். எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்கள் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் திட்டத்தைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயத்தை அழித்துத் தான் தொழில்துறையை வளர்க்க வேண்டும் என்றால் அந்தக் கொள்கை மிகவும் மோசமான விளைவை உண்டாக்கும். எனவே எங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து எங்கள் பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும், விவசாய நிலத்தைப் பாழ்படுத்தாமல் இருக்க மேல்மாத் திட்டத்தைக் கைவிட்டு விவசாயமற்ற தரிசு நிலத்தில் சிப்காட்டை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து புகார் அளிக்க சென்னை வந்த இருபதுக்கும் மேற்பட்ட எங்களை முதலமைச்சரைச் சந்திக்க விடாமலே காவல்துறையினர் கைது செய்து இரவு 10 மணிக்கு மேல் கிளாம்பாக்கத்தில் விட்டுச் சென்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு; கோவை நீதிமன்றத்தில் வீடியோக்கள் வைத்து விசாரணை தொடக்கம்..

ABOUT THE AUTHOR

...view details