சென்னை:சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து பல்வேறு நபர்கள் கைது செய்து வருவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால், போதை பொருள் புழக்கத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (நவ.06) இரவு உயர் நீதிமன்றம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக இரண்டு டூவீலர்களில் வந்த ஒரு பெண் உட்பட ஐந்து பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தில் வந்த ஐந்து பேரையும் எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், பெண் சிறுவர்களை உடன் வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள், பப்புகளுக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை குறி வைத்து மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மணலி பகுதியைச் சேர்ந்த பாத்திமா மௌபியா (25), கொடுங்கையூரைச் சேர்ந்த தினேஷ்(23), புழல் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (20) மாரும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.