தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..காரணம் என்ன? - ஆர்டிஓ விசாரணை! - WOMEN DEAD IN TIRUPATTUR

ஆம்பூர் அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண் சுதா
உயிரிழந்த பெண் சுதா மற்றும் போரட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2024, 1:51 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அருகே, திருமணமாகி 6 ஆண்டுகளே ஆன 2 பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து, உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து, சம்பவ இடத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திருப்பத்தூர் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுதா மற்றும் அவரது கணவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், சுதாவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதால், அவரது மாமியார் சுதாவிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (நவ.17) சுதா வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக சுதாவின் கணவர், குடியாத்தம் மீனூர் பகுதியில் உள்ள சுதாவின் உறவினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் குடும்ப தகராறு காரணமாக சுதாவை அவரது கணவர் மற்றும் மாமியார் அடித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுகின்றனர் எனக்கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் குழந்தையை கடத்திய பெண் ஈரோட்டில் கைது!

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். மேலும், விசாரணைக்காக போலீசார் சுதாவின் மாமியரை அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது, சுதாவின் உறவினர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் அக்கா கூறுகையில், “சொத்தில் பங்கு கேட்டு சுதாவை கொடுமை படுத்தியுள்ளனர். அவளை தாய் வீட்டிற்கு அனுப்புவதே இல்லை. என்னிடமும் பேசக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால், திருமணத்திற்கு வாங்கிக்கொடுத்த பொருள்களை உடைத்தும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் கூறியும் தகராறு செய்துள்ளனர். சுதாவின் கணவர் மட்டுமல்லாது அவரது மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோரும் கொடுமை செய்துள்ளனர். என் தங்கைக்கு மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details