தேனி:தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞருக்கு, சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடித்து தாக்கிய வழக்கில் ஜன.31ஆம் தேதி, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கம்பம் அருகே கூடலூர் பகுதியில் மற்றொரு வழக்கிற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற விஜயகுமாரை தேனி காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று (பிப்.2) தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வழக்கு விசாரணைக்குப் பின்பு விஜயகுமாரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்துள்ளனர். அப்போது விஜயகுமார் தனக்கு டீ வேண்டும் எனக் கேட்ட நிலையி, நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கி கொடுத்து விட்டு காவலர்களும் டீ குடித்துள்ளனர்.
இதனிடையே, காவல்துறையினர் ஒருபக்கம் திரும்பி டீ குடித்த சமயத்தில், விஜயகுமார் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடி நீதிமன்றத்திற்கு பின் உள்ள காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது.