சென்னை: ''சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டால் தான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று சட்ட அமைச்சர் ரகுபதி கூறுவது வன்னியர்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி'' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; ''வன்னியர் இடஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சில பத்திகளையும், முழுமையான சாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள் இல்லாத நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அடிப்படையிலான தரவுகளை மட்டும் சமூக, கல்வி மற்றும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலைக்கான காரணங்களாக எடுத்துக் கொண்டு முடிவெடுக்க இயலாது என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அனுப்பிய தகவல்களையும் சுட்டிக்காட்டி அவற்றின் அடிப்படையில் தான் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தமிழக அரசு வந்திருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.
ஒரு மாநிலத்தின் சட்ட அமைச்சராக இருந்து கொண்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்களையும், இடஒதுக்கீடு வழங்குவதற்கான தேவைகளையும் அறிந்து கொள்ளாமல் அவர் பேசி வருவதால், அவருக்கு சில விளக்கங்களை மிகவும் எளிமையாக தெரிவிக்க விரும்புகிறேன்.
1. வன்னியர் இடஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் எந்த இடத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திதான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 68-ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள pertinent, contemporaneous data என்ற பதத்திற்கு ‘‘நிகழ்காலத்திற்கான தகுந்த புள்ளிவிவரங்கள்’’ என்பதுதான் பொருளே தவிர, அமைச்சர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சாதிவாரி புள்ளிவிவரங்கள் என்று பொருள் அல்ல. சட்ட அமைச்சர் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
2. சட்ட அமைச்சர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, ‘‘வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மக்கள்தொகை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமுதாயங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை, சமூகநிலை போன்ற விவரங்கள் எதுவும் ஆராயப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது உண்மை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் இந்த பகுதியை படித்தாலே, நீதிபதிகள் கோருவது வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலைமை குறித்த விவரங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கும்போது வன்னியர் இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் என்ற தேவை எங்கிருந்து எழுகிறது?
3. ஏதேனும் ஒரு சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்து புதிதாக வழங்கப்பட்டாலோ அல்லது இப்போதுள்ள இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி வழங்க வேண்டியிருந்தாலோ மட்டும்தான் அந்த குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள்தொகை விவரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், வன்னியர்கள் புதிதாக இடஒதுக்கீடு கோரவில்லை; இருக்கும் இடஒதுக்கீட்டின் அளவையும் அதிகரிக்கக் கோரவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில்தான் உள்ஒதுக்கீடு கோருகிறது. இதை தீர்மானிக்க மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, அதற்கு ஆதாரமாக இருந்த சாதிவாரி மக்கள்தொகை விவரங்களே போதுமானவை. அதற்காக புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை.
4. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இருந்தால் தான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இப்போது கூறுவதே பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.