சென்னை:டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''திருவண்ணாமலையில் ராமதாஸ் தொடங்கிய தமிழ் நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு நடக்க உள்ளது. விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் கண்டறிந்து அதற்கு தீர்வு காணப்படும். எந்த அரசியல் கட்சியும் உழவர்களுக்கு என்று தனியாக மாநாடு நடத்தியதில்லை. உழவர்கள் உயர வேண்டும். தற்கொலைகள் நடக்க கூடாது, விளைச்சலுக்கு விலை கிடைக்க வேண்டும். பழம், கனி, காய்கறிகள் உள்பட எல்லா விளைச்சலுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை இருக்க வேண்டும்.
வட தமிழக மக்கள் மீது பரபட்சம்
சென்னையில், வெள்ளம் வந்த போது வீட்டிற்கு ரூ. 6 ஆயிரம் வழங்கிய அரசு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட போதும் ரூ. 6 ஆயிரம் வழங்கியது. ஆனால், வட தமிழகமான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வீட்டிற்கு ரூ. 2 ஆயிரம் தருகிறது. அதுவும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தான் தருகிறார்கள். சரியான முறையில் பணம் போய் சேரவில்லை. வெள்ளம் வர காரணமே திமுக அரசுதான். சாத்தனூர் அணையை விடியற்காலை முன் அறிவிப்பு இல்லாமல் 20 ஆயிரம் கன அடி திறந்த காரணத்தினால் தான் தூங்கி இருந்த மக்கள் வெளியேறிவிட்டனர். முதலமைச்சர் வட தமிழக மக்கள் மீது பரபட்சம் காட்டுகிறார்.
டங்ஸ்டன் சுரங்கம்
மதுரை டங்ஸ்டன் சுரங்கம் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மாநில அரசும் முடிவு செய்து உள்ளது. மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தி இருக்கிறது. முதலமைசராக இருக்கும் வரை டங்ஸ்டன் திறக்க விட மாட்டேன் என்று சொல்லும் ஸ்டாலினுக்கு, கடலூர் நிலக்கரி சுரங்கத்திற்கு ஏன் கோபம் வரவில்லை. மதுரை, கடலூரில் விவசாயம் செய்ய கூடிய 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அழித்து விட்டனர். இன்னும் 50 ஆயிரம் ஏக்கர் அழிக்க துடித்து கொண்டு இருக்கிறார்கள். இனி தமிழ் நாட்டில் நிலக்கரி சுரங்கம் தோண்ட அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட வேண்டும். மதுரைக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா? எல்லாமே விவசாய நிலம் தானே. கடலூர் மக்கள் குறித்து முதலமைச்சர் கவலைப்படவில்லை.