சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை பாமக தான் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறிதைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது 'X' சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று விரும்பினால், 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தும்படி கூட்டணி கட்சியான பாஜகவை பாமக தான் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் கையாலாகாத தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.
இதற்காக 2008ஆம் ஆண்டில் 150க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்துகளை வாங்கி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலிடம் ஒப்படைத்தது.
மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை ஒப்புக் கொள்ள வைத்தது போன்ற வரலாறுகள் எல்லாம் அந்த ஆட்சியில் திமுக சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்த இரகுபதி போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்காக மத்திய அரசை பாமக தான் வலியுறுத்த வேண்டும் என்றால், தமிழகத்தில் திமுக ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்? பதவி விலகி விடலாமே? நாடாளுமன்ற மக்களவையில் திமுக அணிக்கு 39 உறுப்பினர்கள் எதற்கு? அவர்களும் பதவி விலகி விடலாமே? அதிகாரத்தை சுவைப்பதற்கு மட்டும் தான் மக்கள் வாக்களித்தார்களா?" எனக் சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும், "தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க வேண்டியது, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன.
இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி கடமையை செய்ய திறனற்ற திமுக அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது. பிகார், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்று தட்டிக்கழிக்கவில்லை.
அந்த அரசுகளே 2008ஆம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. அதே வழியில் பயணிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம், சமூகநீதி வழங்கமாட்டோம் என்பதுதான் அரசின் கொள்கை என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.
தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கும் ரகுபதி, தமக்குத் தெரிந்த சட்ட அறிவை பயன்படுத்தி மனசாட்சிக்கு அஞ்சி தமிழக அரசுக்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதைவிடுத்து திமுக தலைமை சொல்லிக் கொடுத்ததையே கிளிப்பிள்ளை போல மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது" என்று ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க:"தனியார் பால் நிறுவனங்கள் உழவர்களை சுரண்டுவதை தடுக்க ஆணையம் வேண்டும்" - பாமக ராமதாஸ் வலியுறுத்தல்!