சென்னை: இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது; '' இந்தியா அனைத்துத் துறைகளிலும் உலக நாடுகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறி வருகிறது என்பதில் எந்தவித ஐயத்திற்கு இடமில்லை. அதேநேரத்தில் சமூகநீதியைக் காப்பதில் பல்லாண்டுகளாக போடப்பட்டு வரும் முட்டுக்கட்டைகளை அகற்றுவது மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது. பல நூற்றாண்டுகளாக கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு சமூகப்படிநிலையின் அடித்தளத்திற்கு தள்ளப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதன் மூலம் தான் அவர்களை சமூகப்படிநிலையில் உயர்த்தி சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும். இந்த நடைமுறையின் அடிப்படை இட ஒதுக்கீடு.
சாதிவாரி மக்கள்தொகை புள்ளி விவரங்கள்: ஆனால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிருபிக்க சாதிவாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தேவை. ஆனால், நம்மிடம் அது இல்லை. இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை வழங்கப்பட்ட எந்தவொரு எந்தவொரு இட ஒதுக்கீடும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதை பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க:பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து.. இயக்குநர் மோகன்ஜி கைது!
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்தி, இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரியான மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாச்சாரம் நிரூபிக்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்படக்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் அது இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும். அதைத் தவிர்ப்பதற்காகத் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல பத்தாண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.