தமிழகத்தில் குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், இவ்வளவு நாட்களாக பாதுகாத்து வந்திருந்த நமது சருமத்தில் பல பிரச்சனைகள் வர தொடங்கியிருக்கும். குளிர்காற்று, நமது சரும துளைகளை அடைப்பதன் மூலம் இறந்த செல்களை தக்க வைக்கிறது. இதனால், சருமம் வறட்சி, அரிப்பு முதல் சருமம் கருமையடைவது வரை என சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் சருமத்தை எப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சுடு தண்ணீரில் குளித்தால் இதில் கவனமாக இருங்கள்: குளிர்காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்கும் போது, தோல் விரிவடைந்து, வெளியில் வரும் போது தோல் சுருங்க ஆரம்பிக்கும். எனவே, தண்ணீரில் வெப்பநிலை தேவையானதை விட அதிகமாக அமையக்கூடாது. அறையை கதகதப்பாக வைக்க ரூம் ஹீட்டர் பயன்படுத்துவர்கள், மறக்காமல் அறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். இதனால்,காற்றில் ஈரப்பதம் அதிகரித்து சரும பிரச்சனைகள் வராது.
மாய்ஸ்சரைசர் அவசியம்: குளிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் சருமம் வறட்சியை தடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்டரைசர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். குளித்து வந்ததும், முகத்திற்கு மாய்ஸ்சரைசர் கீரிம், உடலுக்கு லோஷன் பயன்படுத்தவும். இயற்கை எண்ணெய்களையும் பயன்படுத்தலாம். குறிப்பாக, இரவு தூங்க செல்வதற்கு முன் இவற்றை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தை மென்மையாக கையாளுங்கள்: கோடைக்காலத்தில், முகத்தை வாரத்திற்கு இரண்டு முறை ஸ்க்ரப் செய்தது போல, குளிர்காலத்தில் செய்யக்கூடாது. கடுமையான பொருட்களை முகத்தில் பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் நீங்கி, சருமம் வறண்டு போகும். குளிர்காலத்திற்கு ஏற்ப மென்மையான ஃபேஸ் வாஷ், சோப் மற்றும் கிளஸ்சர்களை பயன்படுத்துங்கள்.
தண்ணீர் குடிங்க: குளிர்காலத்தில் சீதோஷ்ண நிலை அதிகமாக இருப்பதால் பலரும் தண்ணீர் அதிகம் பருகுவது கிடையாது. இதுவே, குளிர்காலத்தில் சரும பிரச்சனை வர முக்கிய காரணியாகவும் இருக்கிறது. சருமத்தில் ஈரப்பதத்தை உறுதிசெய்யும் வகையிலும், உடலில் நீரிழப்பை தடுக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.
சன்ஸ்கிரீன், லிப் பாம்: குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகத்திற்கு அதிகம் கவனம் செலுத்தும் நாம், உதட்டை பராமரிக்க தவரக் கூடாது. இரவு தூங்க செல்வதற்கு முன், உதட்டிற்கு லிப் பாம் போட்டு தூங்குவதால், காலையில் உதடு ஈரப்பதத்துடன் இருப்பதோடு நாள் முழுவதும் வறண்டு போகாமல் இருக்க உதவுகிறது.
ஆரோக்கிய உணவு: குளிர்காலத்தில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், இவற்றில் உள்ள சத்துக்கள் சருமத்தை வறண்டு போகாமலும் பளபளப்பாக வைத்து கொள்கிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்