தேனி: தனியார் மருத்துவமனையில், முறையான சிகிச்சை அளிக்காமல் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், ஒன்றரை லட்சம் பணத்தைக் கட்டி உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மடக்கருப்பு - பாண்டியம்மாள் தம்பதி. இவர்களது மகன் மனோஜ் குமார் (22). இவருக்கு நிஷா என்ற பெண்ணுடன் திருமணமாகி, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், மனோஜ் குமார் கீழே விழுந்ததில், இடுப்பில் காயம் ஏற்பட்டு, கடுமையாக வலி வந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், கடந்த நவ.20 ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகையால், நேற்று முன்தினம் சனிக்கிழமை தேனி என்.ஆர்.டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மனோஜ் குமார் கோமா நிலையில் இருப்பதாகவும், அவரை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று (நவ.24) மாலை 7.30 மணியளவில் திடீரென மனோஜ் குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரூ.1.50 லட்சம் சிகிச்சை பணத்தை கட்டினால் தான், உடலைத் தருவதாக நிர்வாகம் தெரிவித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: வாக்காளர் சிறப்பு முகாம்: அயோத்தி குப்பத்தில் திமுக - தவெகவினர் இடையே திடீர் மோதல்!
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில், “கடந்த 23ஆம் தேதி காலை மனோஜ் குமார் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் இருந்ததால், என்ன பேசுகிறார் என்பது தெரியாமல் சுயநினைவின்றி இருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அவரின் உறவினர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனோஜ் குமார் சிகிச்சை பலனின்றி சுயநினைவு இழந்து உயிரிழந்துள்ளார்” என விளக்கம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்த மனோஜ் குமார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்