சென்னை: “இராமதாசு அவர்களுக்கு வேறு வேலை இல்லாததால் தினந்தோறும் ஏதேனும் அறிக்கைவிட்டு கொண்டே இருப்பார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, “அவரைப்போன்று பிரகாச அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை என பாமக நிறுவனர் இராமதாசு பதில் அளித்துள்ளார்.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக அதானி குழுமம் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், “அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து முதலமைச்சர்ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் இராமதாசு அறிவிக்கை வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சர் பதில்:இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியதை குறித்தும் கேட்கப்பட்ட செய்தியாளர்களிடத்தில் பேசிய முதலமைச்சர், "ஏற்கனவே துறை சார்ந்த அமைச்சரே அதுகுறித்து பேசிவிட்டார். அதை நீங்கள் ட்விஸ்ட் பன்னிட்டு இருக்க வேண்டாம். பாமக நிறுவனர் இராமதாசுக்குவேறு வேலை இல்லாததால், தினந்தோறும் ஏதேனும் அறிக்கைவிட்டு கொண்டே இருப்பார். அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டே இருக்க அவசியம் இல்லை,'' என்று பதிலளித்திருந்தார்.
அன்புமணி இராமதாஸ் கண்டனம்:முதலமைச்சரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி இராமதாஸ்,"இப்படி ஒரு முதலமைச்சரை பெறுவதற்கு தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ? முதலமைச்சர் இந்த அளவுக்கு பதட்டம் அடைந்திருக்கத் தேவையில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் (பாமக) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.