விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானதை அடுத்து, இத்தொகுதி காலியான தொகுதியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
அடுத்த மாதம் 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளை மறுநாள் நிறைவடைகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் பனையூர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் இதுவரை சுயேச்சையாக 7 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று காலை 11.10 மணியளவில் இந்தியா கூட்டணியின் சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், துரை ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அவர் தாக்கல் செய்துவிட்டு சென்ற ஒரு மணி நேரம் கழித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணி தால் செய்தார். அவருடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, பாஜக தலைவர்கள் ஏஜி சம்பத், விழுப்புரம் பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்புமனு தாக்கல்: அமைச்சர் பொன்முடி சபதம்!