வேலூர்/கும்பகோணம்:சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளதாக அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், லஞ்சம் கொடுத்ததாக பட்டியலிடப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் இருப்பதால் தமிழக அரசு மீது கேள்விகள் எழ தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கு மத்தியில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் அதானி விவகாரம் குறித்தும், அது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியதை குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது அவர், '' ஏற்கனவே துறை சார்ந்த அமைச்சரே அதுகுறித்து பேசிவிட்டார். அதை நீங்கள் ட்விஸ்ட் பன்னிட்டு இருக்க வேண்டாம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் வேறு வேலை இல்லாததால் தினந்தோறும் ஏதேனும் அறிக்கைவிட்டு கொண்டே இருப்பார். அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டே இருக்க அவசியம் இல்லை'' என்றார்.
இதையும் படிங்க:FENGAL Cyclone: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!
முதல்வரின் இந்த பேச்சால் பாமகவினர் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ராமதாஸ் குறித்து மரியாதை குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேலூர் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த கூடினர். தகவல் அறிந்து வந்த போலீசார் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது, உங்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படவில்லை என கூறி 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு போலீசாருக்கும், கட்சியினருக்கும் சிறிய அளவிலான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, தஞ்சை வடக்கு மாவட்ட பாமக சார்பில், பாமக மற்றும் கருப்பு கொடிகளுடன் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து மடக்கி கைது செய்து அழைத்து சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்