ராமநாதபுரம்:உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நாளை மறுநாள் (ஜன.22) நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்து உள்ளார். நேற்று (ஜனவரி. 19) சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்று (ஜனவரி 20) பிரதமர் நரேந்திர மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதற்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தியாவின் பிரதமராக ஒருவர் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சாமி தரிசனம் செய்த பின் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றார்.
ராமேஸ்வரத்தில் ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்ற நரேந்திர மோடி அங்கு இருந்து அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தார். பிரதமர் வருகை காரணமாக ராமேஸ்வரம் முழுவதும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"குப்பைக்குள் கண்ணாடிகளை போடாதீர்கள்" - தூய்மைப் பணியாளர்கள் பற்றி யோசிங்க..! - சென்னை மாநகராட்சி ஆணையர்