தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் எஸ்.சங்கரப்பெருமாள் தலைமையில், துணை தலைவர்கள் சுரேஷ்குமார், பஞ்சாபகேசன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, பொதுக்குழுவிற்கு வந்த அனைவரையும் தஞ்சை மாவட்ட தலைவர் எஸ்வி முரளி வரவேற்க, செயல்தலைவர் கடந்த ஆண்டின் சங்க செயல்பாடுகளை விவரித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாநில பொருளாளர் சதீஷ் வரவு, செலவு கணக்குகளை சமர்பித்தார். பின் நிறைவாக, தஞ்சை மாவட்ட செயலாளர் ஏ.பாலமுருகன் நன்றி உரை கூறினார். இப்பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் சங்கரப்பெருமாள் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 5 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மேலும், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.