சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத மாணவர்கள், 2025 ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தவறினால் அந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டு விடும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்தில் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், '' 2014 ஆம் ஆண்டு முதல், 2020 ஆம் ஆண்டு வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு தனித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு அந்தந்த தேர்வு மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளாத மாணவர்களின் சான்றிதழ்கள் மீண்டும் தேர்வு துறைக்கு திரும்ப பெறப்பட்டன. சான்றிதழ்களை பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்படும். அதுவரை பெறாத சான்றிதழ்கள் அழித்து விடப்படும் என அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 3 வருடங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்படல் வேண்டும்.
இதையும் படிங்க: வீட்டுக்குள் மர்மமான முறையில் சடலமாக கிடந்த தாய் மற்றும் மகன்.. வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
அதன்படி, நீண்ட நாட்களாக தேக்கமடைந்துள்ள மதிப்பெண் சான்றிதழ்களை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இது நாள் வரை மதிப்பெண் சான்றிழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு அளித்து சான்றிதழ்களை 2025 ஜனவரி 31ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் அரசு உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த காலத்திற்குப் பின் அசல் சான்றிதழ் அழிக்கப்பட்டு விடும். இதன் பின்னர் சான்றிதழ்களை பெற விரும்பினால் இரண்டாம்படி சான்றிதழ் (duplicate) பெறுவதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்'' என அதில் கூறியுள்ளார்.