சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல ஜோடிகள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். சமீபத்தில் திருமணமான ஜோடிகள் அல்லாது பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த பிரபலங்களே தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு விவாகரத்து அறிவித்த பிரபங்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
ஜிவி பிரகாஷ், சைந்தவி: பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கடந்த 2013ஆம் ஆண்டு இசைக்கலைஞரான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2020ஆம் இருவருக்கும் அன்வி என்ற மகள் பிறந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி இணைந்து பையா படத்தில் அடடா மழடா, தெறி படத்தில் என் ஜீவன், அசுரன் படத்தில் எள்ளு வய பூக்களையே என பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி 'கனவே' என்ற பாடலை பாடியுள்ளார். இந்த ஜோடி விவாகரத்தை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் சைந்தவி பங்கேற்று பாடல் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி, ஆர்த்தி: நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜெயம் ரவி, ஆர்த்தியை திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தது இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஆர்த்தி தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடைசியாக இருவரும் கடந்த மாதம் உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏ.ஆர். ரகுமான், சாய்ரா பானு: இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் நம்ப முடியாத வகையில் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு விவாகரத்து என கூறலாம். திருமணமாகி 29 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஏ.ஆர்.ரகுமான் சாய்ரா பானு ஆகியோர் தங்களது விவாகரத்து அறிவித்தனர். இவர்களுக்கு ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதனைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானை பிரபல இசைக் கலைஞருடன் ஒப்பிட்டு அவதூறு பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாய்ரா பானு, அவரது மகன் ஏ.ஆர்.அமீன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
தனுஷ், ஐஸ்வர்யா: திருமணமாகி 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 2022ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். பின்னர் தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து கடந்த மாதம் குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
இதையும் படிங்க: டிஜிபி ஷங்கர் ஜிவால் மகள் ஜோடி, சிவகார்த்திகேயனுக்கு வில்லன்... ஜெயம் ரவி பட கலக்கல் அப்டேட்கள்! - JAYAM RAVI IN SK25
சீனு ராமசாமி, GS தர்ஷனா: நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படம் வெளியானது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவி GS தர்ஷனாவை பிரிவதாக அறிவித்தார். இருவரும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் திடீரென விவாகரத்தை அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.