விருதுநகர்: மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்று (15.12.2024) சென்றிருந்தார். இவருடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஜீயர் , ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானு ஜீயர் ஆகியோரும் கோயிலுக்குச் சென்றனர்.
இந்த விருந்தினர்களுக்கு வெண்குடையுடன் மேள தாளங்கள் முழங்க வரவேற்பும், பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. ஆண்டாள் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்கள் முன்னே செல்ல, இளையராஜா அவர்களை தொடர்ந்து சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில் இளையராஜா தடுத்து நிறுத்தப்படுவதும், சில வார்த்தைப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், அர்த்த மண்டப படியை தாண்டிச் சென்ற இளையராஜா மீண்டும் பின்நோக்கி வந்து வாசலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்வதும் பதிவாகியுள்ளது.
கோயில் நிர்வாகம் விளக்கம்
ஆண்டாள் கோயிலில் கருவறையில் மூலவர் சிலை அமைந்திருக்கும். அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் இருக்கும். இதற்கு அடுத்த மண்டபத்திலிருந்தே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜீயர்கள் அர்த்த மண்டபத்தில் நுழைந்த நிலையில், அவர்களுடன் சென்ற இளையராஜாவுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.
இசைஞானி என ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா பாசுரம் பாடிய ஆண்டாள் கோயிலில் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஆண்டாள் கோயிலின் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரான சர்க்கரை அம்மாள், கோயிலில் இந்த நடைமுறை வழக்கமான ஒன்று தான் என கூறினார்.
கோயில் கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தில் நிரந்தரமாக உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதால் ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்ற அவர், ஜீயர்களுடன் வந்த இளையராஜா தெரியாமல் அர்த்த மண்டபத்திற்குள் வந்தபோது பட்டர்கள் அனுமதி இல்லை என்பதை தெளிவு படுத்தியதாக விளக்கம் அளித்தார். இதனையடுத்து இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார் எனவும் செயல் அலுவலர் கூறினார்.
தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் இடம்பெற்றிருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் ராஜகோபுரமேயாகும். இந்த கோயிலின் ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இளையராஜா கோயிலுக்கு சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளியே நின்று தரிசனம் செய்த இளையராஜாவுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பாடல் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்து கொண்டார்.
ஆண்டாள் கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 'விஷ்ணு' வடபத்திரசயீ என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இங்கு லட்சுமி தெய்வம் ஆண்டாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை தினந்தோறும் வடபத்ரசாயீ பெருமாளுக்கு சாற்றும் வைபவம் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்துவருகிறது.