சென்னை: கூட்டாட்சிக்கு எதிரான மற்றும் நடைமுறைக்கு மாறான 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஜனநாயகத்தை அழித்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என மத்திய பாஜக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த மசோதாவுக்கு டிசம்பர் 12ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், தேர்தல் செலவு மற்றும் அரசியல் இடையூறுகள் குறைக்க முடியும் என இந்த மசோதாவை ஆதரிக்கும் பாஜக, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
#INDIA will resist the anti-federal & impractical “One nation one election” as it will push the country into the perils of unitary form of governance, killing its diversity and democracy in the process.
— M.K.Stalin (@mkstalin) December 16, 2024
The Union BJP government seeks to push it with an ulterior motive of… pic.twitter.com/PslpjWoRwM
ஜனநாயகத்தை அழித்துவிடும் : இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மற்றும் நடைமுறைக்கு மாறான ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா கூட்டணி வண்மையாக எதிர்கிறது. ஏனென்றால், இவை சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். மேலும், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை முற்றிலும் அழித்துவிடும்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...வரும் வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வாய்ப்பு!
அதிபர் ஆட்சிக்கு முயற்சி: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான அதிபர் ஆட்சி முறையை அமல்படுத்தும் உள்நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது. முன்மொழியப்பட்ட இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால், நாடு அராஜகம் மற்றும் சர்வாதிகாரத்தில் அழியும். இதனை தடுக்க அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் சட்டச் சோதனைகள் நீக்கப்படும். மேலும், மாநிலத் தேர்தல்கள் அரசியல் முக்கியத்துவத்தை இழந்து பன்முகத்தன்மை அழிக்கப்படும்.
இந்தியாவின் அரசியலை மாற்றியமைக்கும் சட்டங்களை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மையான அதிகாரம் இல்லை. இருப்பினும், நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பாஜகவின் கவனத்தைத் திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியா அதன் பன்முகத்தன்மை மற்றும் அரசியலமைப்பை காப்பாற்ற, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல்:"ஜனநாயக விரோத நடவடிக்கை" - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!