சென்னை: சேலத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் உருவாக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில், இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதில் எலவமலை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பதிவாளர் ஏ.டி.பாஸ்கரன், மற்றும் கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைப்பதிவாளர்கள் உள்ளிட்ட 14 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏ.டி.பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுக்களில், 2016-17ம் ஆண்டுகளில் சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மெட்ரோ நகர விரிவாக்க திட்ட வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் போது பின்பற்றிய நடைமுறைகளின் படியே, எலவம்மலை வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'அதிசயமே அசந்து போகும்'.. கண்களைக் கவரும் புதிய பாம்பன் ரயில் பாலம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
2016- 17ல் மெட்ரோ விரிவாக்க திட்ட வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதை தணிக்கை செய்த தணிக்கையாளர், அதில் எந்த குறைபாடும் இல்லை. அரசுக்கு இழப்பு இல்லை என அறிக்கை அளித்த நிலையில், அதே தணிக்கையாளர் எலவம்மலை கூட்டுறவு சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விதிமுறைப்படி, வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில், கூட்டுறவுத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிறப்பு தணிக்கை குழு அறிக்கையில், முறைகேடுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும், கூட்டுறவு வீட்டு வசதி சங்க அதிகாரிகள் சஸ்பெண்ட்டை இறுதி தண்டனையாக கருதக் கூடாது என தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விரிவான விசாரணைக்காக அக்டோபர் 15ம் தேதிக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்துள்ளார்.