திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் அருகே, அம்பாசமுத்திரம் உதவி காவல் ஆய்வாளர் ஆக்னல் விஜய் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சொகுசு காரை நிறுத்தி, அதனை ஓட்டி வந்தவர் மற்றும் உடன் இருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில், அவர் தென்காசி மாவட்டம் ஆனைகுளம் குலையநேரியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (38) மற்றும் ஆய்க்குடியைச் சேர்ந்த பழனி ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் கார் வாங்கி விற்கும் தரகர் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் வந்த சொகுசு காரை சோதனை செய்த போது, அதில் சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய லைசென்ஸ் இருக்கிறதா என விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் விசாரணை நடத்தி உள்ளனர்.