தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே மறவர் காலனியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (35). இவரது மனைவி மரியா. கட்டடப் பணி செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மது பழக்கம் கொண்ட இவர், தினமும் வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாய் அருகே உள்ள கிணற்றிற்குச் சென்று மது அருந்திவிட்டு. கிணற்றில் குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில், இவருடைய உறவினர்கள் இருவர் கேரளாவிலிருந்து வருகை புரிந்துள்ளனர். இதனால், அவர்களுடன் நேற்று (பிப்.12) வழக்கம்போல கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு மூவரும் மது அருந்திவிட்டு, கிணற்றில் குளித்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு கிணற்றில் குளித்த மூவரில் இருவர் மட்டும் வெளியே வந்துள்ளனர். அதிகப் போதையில் இருந்த வெள்ளத்துரை வெளியே வரவில்லை.
வெள்ளத்துரை கிணற்றிலிருந்து வெளிவரவில்லை என்பதை அறிந்த அவருடைய உறவினர்கள் இருவரும், ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் தலைமையிலான வீரர்கள், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த வெள்ளத்துறையின் உடலை இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இறந்தவரின் உடலை, உடற்கூறு ஆய்விற்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!