கோயம்புத்தூர்: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தந்தை பெரியார் குறித்து பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, “பெரியார் கூறியதாக ஆதாரமற்ற பொய் செய்திகளை சீமான் பரப்பி வருவதாக” தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
ஆனால், பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு ஆதரவு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பெரியார் பேசியதையெல்லாம் பொதுவெளியில் பேச முடியாது”எனவும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, “மானமும், அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்திருந்தார். மேலும், பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்தை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இன்று (ஜனவரி11) சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.