பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த 30 நிமிடத்திலேயே மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையினை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தையல் இயந்திரம் பெற்ற மாற்றுத்திறனாளி பெண் (Credits - ETV Bharat Tamil Nadu) வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளி மக்களை அமர வைத்து. அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மாவட்ட ஆட்சியர் அவர்களது கோரிக்கை மனுக்களை பெறுவார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற 32 வயதான உயரம் குறைந்த, செவித்திறன் குறைபாடுடைய காசியம்மாள் என்ற மாற்றுத்திறனாளி பெண் தனக்கு தையல் இயந்திரம் கேட்டு மனு அளித்தார்.
மாற்றுத்திறனாளி பெண்ணின் மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் கற்பகம், மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் உயரத்திற்கு ஏற்றவாறு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கிட உத்தரவிட்டார். அதனை அடுத்து, 30 நிமிடத்திற்குள் அந்த பெண்ணுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
அதனை அடுத்து, தையல் இயந்திரம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சில மணி நேரத்திலேயே, தனது மனுவை ஏற்று தனக்கு மோட்டார் வைக்கப்பட்ட தையல் இயந்திரம் அளித்தமைக்கு மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி பெண் செய்கை மொழியில் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க:மூனு மாசம் தான் டைம்.. செல்லப்பிராணிகள் லைசன்ஸ் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி கெடு!