மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நடமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து சிறுத்தையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சிறுத்தை பிடிபடாத நிலையில், ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அப்பகுதியிலிருந்த 9 பள்ளிகளுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி விடுமுறையும் அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 16 தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து சிறுத்தையைப் பிடிக்க 3 ராட்சச கூண்டுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும், சிறுத்தையைப் பிடிப்பதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 3ஆம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று கழுத்துப்பகுதி குதறிய நிலையில் இறந்து கிடந்தது. ஆனால், ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காட்டில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை எனவும், சிறுத்தை எங்கிருக்கிறது என்பது புலப்படாத நிலையில் ஆடு இறந்துள்ளது எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ஆடு கொல்லப்பட்டிருந்த தன்மையை ஆராய்ந்த வனத்துறையினர் ஆட்டை சிறுத்தை கொன்று இருக்க 70 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், கால்தடங்கள் இல்லாததால் உறுதியாகச் சொல்ல முடியாது எனவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என்றும் தெரிவித்தனர். மேலும், ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதியில் மீண்டும் நேற்று இரவு 3 கூண்டுகளில் உயிருடன் ஆடுகள் மற்றும் இறைச்சியை வைத்து சிறுத்தை அகப்படுமா? எனக் வனத்துறையினர் காத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் யார்ட் பிளாட் பார்மில் ஒரு ஆட்டினை அடித்து சிறுத்தை தின்றதாகப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, கொல்லப்பட்ட ஆட்டின் தலை மற்றும் முன்கால்கள் மட்டும் எஞ்சிய நிலையில், அவற்றை வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.