திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மம்முடிமானபள்ளி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தின் வழியாகத்தான் மேல்மாம்முடிமானப்பள்ளி, கோழிமூக்கனூர், பேட்ராயன்வட்டம், செத்தமலை, காட்டிநாயக்கனூர், கூழிகான்வட்டம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வர வேண்டும்.
இந்த நிலையில் மம்முடிமானபள்ளியில் செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு புளியமரம் உள்ளது. இந்த புளியமரமானது சாலையின் வளைவில் அமைந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும் இதனால் அவ்வபோது விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் சாலையின் மறுபக்கம் ஐந்தடி அளவிலான பள்ளத்தாக்கில் நிலங்கள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் விழும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த சாலை மிகக் குறுகியதாக இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் கூட செல்ல முடியாதநிலை உள்ளது, எனவே இந்த புளியமரத்தை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்திட வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.