தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு: உடற்கூறு ஆய்வுக்கு உடலை எடுக்க விடாமல் விவசாயிகள் போராட்டம்! - barrier fence should be constructed

Elephant Attack: ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தவரின் உடலை உடற்கூறு ஆய்விற்கு எடுத்துச் செல்ல விடாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடற்கூறு ஆய்வுக்கு உடலை எடுக்க விடாமல் விவசாயிகள் போராட்டம்
காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 10:40 PM IST

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஈரோடு:தாளவாடி மலைப் பகுதி, திகினாரை மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாக்கையா (64). இவரது விவசாயத் தோட்டம் அப்பகுதியில் உள்ள ஜோரைக்காடு வனப்பகுதியை ஒட்டி கடுக்காய் மரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் தினமும் இரவில் இப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் நுழைந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தனது தோட்டத்து வீட்டில் மாக்கையா உறங்கிக் கொண்டிருந்தபோது நாய் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்து பார்த்த மாக்கையா விவசாயத் தோட்டத்திற்குள் காட்டு யானை நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து யானையை விரட்ட முயற்சி செய்துள்ளார்.

அப்போது காட்டு யானை மாக்கையாவை துரத்தி தும்பிக்கையால் பிடித்து தூக்கி கீழே போட்டுமிதித்ததில் சம்பவ இடத்திலேயே மாக்கையா உயிரிழந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து, காட்டு யானையை விரட்டியடித்தனர்.

இது குறித்து உடனடியாகத் தாளவாடி போலீசாருக்கும், ஜீரகள்ளி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட முயன்றனர். அப்போது தாளவாடி மலைக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை எடுக்க விடாமல் உடல் இருந்த இடத்திலேயே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன், ஆசனூர் மாவட்ட வன அலுவலர் சுதாகர், தாளவாடி தாசில்தார் சுப்ரமணியம் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதை வனத்துறையினர் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள யானை வெளியேறும் இடங்களில் ரயில் தண்டவாளத்திற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு பார்களை பயன்படுத்தி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் எனவும், யானை தாக்கிப் பலியான மாக்கையாவின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

காலை தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் மாலை வரை நீடித்தது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் யானை தாக்கிய உயிரிழப்போருக்குத் தமிழக அரசின் வனத்துறை மூலம் வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், முதற்கட்டமாக இறந்தவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த உடன் நிவாரணத் தொகையில் பாதித் தொகையான ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் விவசாயி மாக்கையாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பேருந்து மீது லாரி உறசி விபத்து; உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details