சென்னை: தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை, சாலை வசதிகள், மழைநீர் வடிகால், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் உறுதியாக முடிக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது. இதன் பின்னர், சென்னை மாநகராட்சிக்கு அருகே உள்ள தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக்கி அதனைச் சுற்றியுள்ள பேரூராட்சிகளை இணைத்தது. தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்கள், 70 வார்டுகள் என தரம் உயர்த்தப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிகளுக்கு தரமான சாலைகள், மேம்பாலங்கள், பாதாள சாக்கடை திட்டம், மழை நீர் வடிகால்வாய்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர். தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு தற்போது மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளது. ஆனால், இப்பகுதிகளில் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் முழுமை பெறாமல் காலதாமதமாகி வருவதாக தற்போது மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் தாம்பரம் மாநகராட்சியில் வரிகள் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதாகவும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் தீர்த்து வைக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பெயருக்கு மட்டுமே மாநகராட்சி என்றும், இதற்கு நகராட்சியாகவே தாம்பரம் இருந்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சிட்லபாக்கம் சமூக ஆர்வலர் தயானந்தன் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “ சிட்லபாக்கம் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால், இப்பகுதியில் குடிநீர் வசதிகள், பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் ஏரிகள் பாதுகாக்கப்படும், தரமான சாலைகள் அமைக்கப்பட்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றமாகவே உள்ளது.
திட்டங்கள் தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், அரசு நிதி வழங்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு தாம்பரம் மாநகராட்சிக்கு, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு சிறப்பு நிதிகளை ஒதுக்க வேண்டும் என்றார்.
வரி கட்டணங்கள் உயர்வு:
தொடர்ந்து, பெருங்களத்தூர் குடியிருப்பு நல சங்க தலைவர் மகேந்திர பூபதி கூறுகையில், “தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த பிறகு, பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை பகுதியில் உள்ள 48 சாலைகளை சீரமைக்க புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் 7 சாலைகளை மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் வரி மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா - அமைச்சரவை ஒப்புதல்! |
சுற்றுவட்டாரப் பகுதியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லைகள் அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி தவறிவிட்டது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை விரைவில் செய்து முடிக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.