நீலகிரி: கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரலாறு காணாத வெயிலின் தாக்கம் அதிகரித்தது, சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக 84.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. வெயிலின் தாக்கத்தைப் போக்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இப்பகுதிக்கு கூட்டமாகப் படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் விளைவாக, இன்று (சனிக்கிழமை) குன்னூர், உதகை மற்றும் அருவங்காடு போன்ற பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் குன்னூர் லேம்ஸ்ராக் (Lambsrock ), டால்பின் நோஸ் (Dolphin Nose) பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையில் ராட்சத மரம் ஒன்று சுற்றுலா கார் மீது விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.