திருநெல்வேலி: கடந்த 2020ஆம் ஆண்டு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், ரயில் சேவையானது கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், பல மாதங்கள் ரயல் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர், அச்சமயத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, பயணிகள் ரயிலானது விரைவு ரயிலாக மாற்றப்பட்டு, குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 நிர்ணயம் செய்யப்பட்டது.
அதற்கு முன்பு வரை பயணிகள் ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் வெறும் 10 ரூபாயாக இருந்த நிலையில், இந்த திடீர் கட்டண உயர்வு பயணிகளுக்கு பேரிடியாக இருந்தது. எனவே, கரோனா தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து, மீண்டும் பழையபடி விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து மத்திய அரசுக்குக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், கரோனா பேரிடர் காலகட்டம் முடிந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகியும், பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று (பிப்.26) நள்ளிரவு 12 மணி முதல் விரைவு ரயிலாக மாற்றப்பட்ட பயணிகள் ரயில், மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்டு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயிலில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.