நெல்லை கான்வென்ட் பள்ளியில் குழந்தைகளுக்கு சீட் வாங்க விடிய விடியக் காத்திருந்த பெற்றோர்கள்! திருநெல்வேலி:திருநெல்வேலி கான்வென்ட் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்பதற்காகப் பெற்றோர்கள், நேற்று (ஏப்ரல் 21) மதியம் முதல் இன்று காலை வரை விடிய விடியச் சாலையில் அமர்ந்து காத்திருந்தனர்.
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் 2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கும் நாள் குறித்த விபரங்கள் அந்தந்த பள்ளிகளில் அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளியான லயோலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 22.04.2024 திங்கள் முதல் எல்.கே.ஜி மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
இது பெண் குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளி, இந்த தொடக்கப் பள்ளியைத் தொடர்ந்து அருகில் இருக்கக்கூடிய இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில் மாணவியின் பன்னிரண்டாம் வகுப்பு வரை மகளிர் பள்ளியாகத் தொடர்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. எனவே இந்த கான்வென்ட் பள்ளியில் தங்கள் குழந்தைகள் சேர்ப்பதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவது வழக்கம்.
நூற்றாண்டுகள் பழமையான இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்பதற்காகப் பெற்றோர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் முதலே சாலையில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கி விட்டனர். இரவில் சாலையில் படுத்து உறங்கினர். இன்றும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். பெற்றோர்களின் இச்செயல் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, தங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலம் குறித்து உணர்த்தும் வகையில் உள்ளது என்றால் அது மிகையல்ல.
இதையும் படிங்க:தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை.. எப்படி விண்ணப்பிப்பது? - Free Admission In Private Schools