மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி தாலுகா கீழ்பெரும்பள்ளம் பகுதியில் தனியார்ப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி நிர்வாகம் தனியார் நிதி நிறுவனத்தில், ரூ.3 கோடி கடன் பெற்று கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் தனியார் நிதி நிறுவனத்தினர் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பள்ளியை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 2ஆம் தேதி பள்ளிக்குச் சீல் வைக்கப்பட்டது. மேலும், வகுப்பறைகளையும் தகரச் சீட்டுகள் கொண்டு அடைத்து வைத்துள்ளனர். இதனையடுத்து, பள்ளியில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள ஓட்டுக் கட்டடத்தில் வைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கல்வி பயிலும் மாணவர்களை வெளியே விரட்டி விட்டு, பள்ளிக்குச் சீல் வைத்துள்ளதாகவும், கடந்த 10 நாட்களாக மாணவர்கள் எந்த ஒரு அடிப்படை வசதியின்றிப் பழைய ஓட்டுக் கட்டடத்தில் ஆபத்தான சூழலில் கல்வி பயின்று வருவதாகக் குற்றம்சாட்டிப் பெற்றோர்கள் நேற்று (பிப்.12) கீழ்பெரும்பள்ளம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூம்புகார் போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டு, பெற்றோர்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர், 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.