தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

600 ஆண்டுகள் பழமையான 'ஆசிரியம்' கல்வெட்டு.. மதுரை அருகே கண்டெடுப்பு! - INSCRIPTION DISCOVERED IN MADURAI

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டியர் கால அரிய வகை 'ஆசிரியம்' (அடைக்கலம்) கல்வெட்டு மதுரை அருகே ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு
மதுரை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2024, 7:50 AM IST

மதுரை:கொட்டாம்பட்டி அருகே கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டியர் கால அரிய வகை 'ஆசிரியம்' (அடைக்கலம்) கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கச்சிராயன்பட்டி ஊராட்சி அருவி மலை அடிவாரத்தில் உள்ள பால்குடியில் மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளையைச் சேர்ந்த தேவி அறிவுச்செல்வம், கதிரேசன், தமிழ்தாசன், கல்லானை சுந்தரம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், நான்கு அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய 'ஆசிரியம்' கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுடன் உள்ள ஆய்வாளர்கள் (ETV Bharat Tamil Nadu)

'ஆசிரியம்' கல்வெட்டில் உள்ள தகவல்?

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் இந்த கல்வெட்டினை படியெடுத்தனர். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கல்வெட்டு விபரங்களை வாசித்து அளித்தார். அதன்படி, அக்கல்வெட்டின் கீழ் பகுதியில் அஷ்டமங்கலம் சின்னங்களில் ஒன்றான பூரண கும்பம் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் 14ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியான மதுரையில் மாலிக்காபூர் படையெடுத்து வரக் காரணமான சுந்தரபாண்டியன் ஆட்சி செய்தான்.

அம்மன்னனின் 7ஆம் ஆட்சியாண்டில் வைகாசி மாதம் 12ம் நாளில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இந்த மன்னனின் காலத்தில் மிகப்பெரிய கலகம் ஏற்பட்டுள்ளது. அச்சமயம் மேலூர் பகுதி குறுநிலத் தலைவனாக தெய்வச்சிலை பெருமாள் என்னும் வீர பராக்கிரம சிங்கதேவன் இருந்துள்ளான்.

கல்வெட்டை எடுக்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

அதில், தெய்வச்சிலை பெருமாள் ஆன வீர பராக்கிரம சிங்கதேவன் என்பவன் சுரபி நாட்டு வேத நாதித்தன் துருக்கன்மியர்க்கு அடைக்கலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. அதாவது துருக்கர் படை எடுப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளான் என்றும் அக்கல்வெட்டு வாசகம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:விதிமீறி கட்டியுள்ள பள்ளி, கோயில் கட்டடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. நீதிபதி அதிரடி!

தனித்துவமான கல்வெட்டு:

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் கூறுகையில், "சுரபி நாடு என்பது இன்றைய திருச்சுனை, கருங்காலக்குடி, அருவி மலை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதியாகும். இன்று பால்குடி என்னும் பெயர் கொண்ட இவ்வூர் அருவி மலை கல்வெட்டு ஒன்றில் பாக்குடி என்று அழைக்கப்படுகிறது. இதேபோல், தெய்வச்சிலை பெருமாள் வீரபராக்கிரம சிங்கத்தேவன் அருவிமலை கல்வெட்டு ஒன்றில் இடம்பெற்றுள்ளார்.

பழமையான விநாயகர் கோயில் (ETV Bharat Tamil Nadu)

அதாவது, 14ஆம் நூற்றாண்டில் மதுரையில் நடைபெற்ற வரலாற்று விவரங்களை தெரிந்து கொள்ளக்கூடிய தனித்துவமான கல்வெட்டாக இதனைக் கருதலாம். மேலும், இந்த ஊரில் இரும்புக்காலம் / பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் பதுக்கைகளும் காணப்படுகின்றன. பழமையான விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த அருவிமலையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் படுக்கைகளும், செஞ்சாந்து, ஓவியங்களும், 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலின் எஞ்சிய பாகங்களும் உள்ளன" எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details