தமிழ்நாடு

tamil nadu

9 மாவட்ட உள்ளாட்சிகளை கலைக்கக்கூடாது.. நெல்லை ஊராட்சி தலைவர்கள் கோரிக்கையின் காரணம் என்ன? - Union Panchayat Election

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 6:42 PM IST

9 District Local Elections: திருநெல்வேலி, தென்காசி, வேலூர், கள்ளக்குறிச்சி உட்பட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் பதவிகளை கலைக்கக்கூடாது என்று நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்  சின்னத்துரை புகைப்படம்
பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்  சின்னத்துரை புகைப்படம் (Credits -ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி:திருநெல்வேலி, தென்காசி, வேலூர், கள்ளக்குறிச்சி உட்பட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊராட்சி ஒன்றிய அமைப்பு பதவிகளை கலைக்கக்கூடாது, 5 ஆண்டு கால பதவியை உறுதி செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்துரை பேட்டி (Credits -ETV Bharat Tamil Nadu)

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்:தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்படி, 9 மாவட்ட ஊராட்சி, 72 ஊராட்சி ஒன்றியங்கள், 2 ஆயிரத்து 902 கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

27 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்:மேற்கண்ட 9 மாவட்டங்கள் தவிர, 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019 டிசம்பரில் நடைபெற்றது. இந்த 27 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற டிசம்பர் 2024-ல் முடிவடைகிறது. இந்த நிலையில், டிசம்பர் 2024-ல் 27 மாவட்டங்கள் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதாக செய்திகள் வெளியானது.

ஆலோசனைக் கூட்டம்: இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் என 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 204 ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில், ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சின்னத்துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், “2024-ல் அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சி அலுவலகர்களும் கூறுகின்றனர். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலை கலைக்கக்கூடாது என்று கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஐந்தாண்டுகள் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (VPDP) தயார் செய்து, அதன் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றி, பொதுமக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. ஒன்பது மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தமிழக அரசின் அனைத்து துறை சார்ந்த பணிகள், சிறப்பு திட்டங்கள் தொடர்பான பணிகள் மற்றும் கிராம ஊராட்சி அடிப்படை வளர்ச்சிப் பணிகளை திறம்பட செய்து கொண்டிருக்கிறோம்.

எனவே, தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி ஐந்தாண்டு காலம் என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளை கலைக்க வேண்டாம்” என்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர். மேலும், தமிழக ஆளுநர் மற்றும் அரசின் கூட்டணி கட்சித் தலைவர்களிடமும் இந்த கோரிக்கை குறித்து நேரில் தெரியப்படுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராகுல் - சோனியா செல்பி.. மெகபூபா முப்தி தர்ணா.. தல தோனி வாக்களிப்பு.. 3 மணி நிலவரம் என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details