தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை அரசை கண்டித்து பாம்பன் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்! - TN Fishermen protest - TN FISHERMEN PROTEST

Tamil Nadu Fisherman: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்து பாம்பன் மீனவர்கள் 2வது நாளாக கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 11:11 AM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மீன்வளத்துறையிடம் உரிய அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பாம்பன் பகுதியை சேர்ந்த மூன்று படகுகள் மற்றும் தனுஷ்கோடியை சேர்ந்த ஒரு படகு என மொத்தம் நான்கு படகுகளையும் பறிமுதல் செய்து அதிலிருந்த 25 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதனையடுத்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து இலங்கை அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளை (ஜூலை 5ம் தேதி) சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பாம்பன் மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது நாட்டுப் படகுகளில் இலங்கை அரசைக் கண்டித்து கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை) தங்களது நாட்டுப் படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் இலங்கை கடற்படையினராக் கைது செய்யப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதி இருந்தார்.

இந்தநிலையில் இன்று பாம்பன் பகுதியில் மீனவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திட்டமிட்டது போல் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தலாமா? இல்லை ரத்து செய்யலாமா? எனக் கூட்டத்தில் மீனவர்கள் தீர்மானிக்க உள்ளனர் மேலும் மீனவர்கள் கைது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

நாளுக்கு, நாள் மீனவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:விசிகவை சேர்ந்த இளைஞர் வெட்டிக் கொலை..மயிலாடுதுறையில் பயங்கரம் - போலீசார் தீவிர விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details