தேனி: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தந்த ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாலார்பட்டி கிராம மக்கள் 26-வது ஆண்டாக பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தந்த பொறியாளர் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் நாளை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள், பொங்கள் திருநாளன்று அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, இந்த வருடம் தை திருநாளான இன்று ஜான் பென்னிகுயிக் 184 வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டி கிராம மக்கள் 26-வது ஆண்டாக அவருக்கு பொங்கல் வைத்து கொண்டாட்டியுள்ளனர். இதில், பாலார்பட்டி கிராமத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இசை வாத்தியங்களுடன், தேவராட்டம், சிலம்பாட்டம் ஆடி, காளை மாடுகளுடன் பென்னிகுயிக் திரு உருவப்படத்தை கைகளில் ஏந்தியவாறு, பொங்கல் பானையுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்து சிறப்பித்துள்ளனர்.