தூத்துக்குடி:திரேஸ்புரம் அண்ணா காலனியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகளைத் தூத்துக்குடி க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி, கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது மஞ்சள், பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்காகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்:
இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று (பிப்.21) திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் படகு மூலம் இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் இருவர் சில பார்சல்களை ஏற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்த க்யூ போலீசார் இரண்டு பேரையும் சுற்றி வளைத்து கைது செய்து, படகைச் சோதனையிட்டனர்.