சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி நீலம் பண்பாட்டு மையம் சார்பில், நினைவேந்தல் பேரணிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும்.
தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா. இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம்.
நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல. சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.