தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கம்மவான்பேட்டை எருது விடும் விழா.. சீறிப்பாய்ந்த காளைகள்! - KAMMAVANPETTAI OX RACE EVENT

கம்மவான்பேட்டை எருது விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தது.

எருது விடும் விழா
எருது விடும் விழா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 2:22 PM IST

வேலூர்:வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியில் 57-வது எருது விடு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக காளைகள் ஓடும் பகுதியில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில், சுற்றுவட்டாரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டு இருந்தன. அப்போது வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன.

வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், லத்தேரி, குடியாத்தம், அணைக்கட்டு, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செய்யாறு, ஆந்திரா மாநிலம், சித்தூர், வி.கோட்டா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த விழாவைக் காண சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அதாவது விழாவில் இம்மிடிநாயக்கனப்பள்ளி, பேடப்பள்ளி, சின்னார், ஒட்டையனூர், சின்னகானப்பள்ளி, பீர்பள்ளி, முருக்கனப்பள்ளி, சாமல்பள்ளம், மேலுமலை, காளிங்கவரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு எருது விடும் விழாவைக் கண்டு ரசித்தனர்.

இவ்விழாவில் முதல் பரிசாக ரூ.88,888, இரண்டாம் பரிசு ரூ.60,066, மூன்றாம் பரிசாக ரூ.45,045 ஆயிரம் உள்ளிட்ட 53 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக ஓடிய காளைகளுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. எருது விடும் நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காளைகள் ஓடும் பாதையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காளைகள் ஓடும் பாதையில் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

போட்டியின் போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது இளைஞர்கள் காளைகளை பார்த்ததும் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். விழாவையொட்டி வேலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரித்விராஜ் சவுகான் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மூன்று டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 200 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க:"3 புலிகளால் 3 லட்சம் பேர் அழிந்து வருகிறோம்" - நெல்லை விவசாயிகள் வேதனை!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், "எருது விடும் திருவிழாவுக்கு தமிழக அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகளால், அடுத்த வருடம் விழா நடத்துவோமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாரம்பரிய காளை விடும் திருவிழா கட்டுப்பாடுகள் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னரே வந்து தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

மாவட்ட ஆட்சியர், தொகுதி எம்.எல்.ஏ., அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையை பின் பற்ற வேண்டும் எனவும், தமிழக அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details