மதுரை:இயற்கையாக விளைவிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பொதுமக்கள் அனைவரும் வாங்கும் விலையில் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பால் ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் இயற்கை சந்தை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுவாக வேதி உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் உற்பத்திப் பொருட்களே, சந்தையில் பெரும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், ஆங்காங்கே இயற்கை சார்ந்த வேளாண் விளைபொருட்களும் அவ்வப்போது தலைகாட்டத்தான் செய்கின்றன. ஆனால், அவை நடுத்தர, அடித்தட்டு மக்களால் வாங்கி நுகர முடியாத விலையில் இருப்பதால், பரவலாகப் பொதுமக்களின் ஈர்ப்பைப் பெற இயலவில்லை. இந்நிலையில், இச்சூழலை மாற்ற தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து அதன் நிர்வாகிகளுள் ஒருவரான பிரசாந்த் கூறுகையில், “மதுரை இயற்கை சந்தை ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை மதுரை ஆவின் சந்திப்பில் அமைந்துள்ள போத்தீஸ் குடோவுனில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 5 வது மாதமாக இந்த சந்தை நடைபெறுகிறது.இயற்கை விவசாயம்என்பது பொதுமக்களின் தொடர்பற்ற சூழலில் உள்ளது. அதனை நெருக்கமாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்கள் மீண்டும் ரசாயன உர விளை பொருட்களோடு இணைத்து விற்கப்படும்போது, அதற்கான மதிப்பினை இழந்து விடுகிறது. அதனால் இந்த நிலையை மாற்றி சந்தையில் இயற்கை வேளாண் விளைபொருட்களும் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதே எங்களின் முதன்மை நோக்கம்.
இந்த சந்தைக்கு வரும் பொதுமக்களோடு உழவர்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு, தங்களது விளைபொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்றனர். மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த சந்தையை நடத்தினாலும், வருகின்ற மக்கள் உழவர்களோடு தொடர்ந்து உறவைப் பேணுகின்ற நிலை ஏற்படுகிறது.
பொதுமக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதால், இனி வருங்காலத்தில் போத்தீஸ் நிறுவன உறுதுணையோடு, இதே இடத்தில் பெரும் விற்பனை மையத்தையும் விரைவில் துவங்க உள்ளோம். இதனால் வருடத்தின் அனைத்து நாட்களிலும் தங்களுக்குத் தேவையான இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்”, என்றார்.