தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் மீண்டு வருவது மிகவும் கடினம்: மருத்துவர் கூறுவது என்ன? - World No Tobacco Day - WORLD NO TOBACCO DAY

World No Tobacco Day: புகைப்பழகத்திற்கு அடிமையாகிவிட்டால் மீண்டு வருவது கடினம் எனவும், அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் புற்றுநோயியல் துறை வல்லுநர் மருத்துவர் கிருஷ்ணகுமார் ரத்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகையிலை பழக்கம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு
புகையிலை பழக்கம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 3:09 PM IST

Updated : May 30, 2024, 3:14 PM IST

மதுரை: "புகையிலை பழக்கத்தால் இந்திய நாட்டின் வளர்ச்சி மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. இதற்கான விழிப்புணர்வை நம் ஒவ்வொருவரும் அவரவர் மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும்" என புற்றுநோயியல் துறை மருத்துவ நிபுணர் டாக்டர் கிருஷ்ண குமார் ரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு:புகையிலை பழக்கத்திலிருந்து குழந்தைகள், சிறுவர்கள் மீட்கப்படுவதை வலியுறுத்தி, இந்த ஆண்டு மே 31ஆம் தேதியை உலக புகையிலை எதிர்ப்பு நாளாக அனுசரிக்க உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. புகைபிடிப்பவர்கள் புகைக்கும் 2.5 அங்குல சிகரெட்டில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பதையும், அவை 50% புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புகையிலை பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக மருத்துவர் கூறும் அறிவுரை (Credits - ETV Bharat Tamil Nadu)

நிக்கோட்டின் எனும் ஆட்கொல்லி:சிகரெட் மற்றும் பீடியில் வீட்டை தூய்மைப்படுத்துவதற்கான திரவங்களில் இடம்பெறும் அமோனியா, எலியைக் கொல்வதற்கான நச்சு, வாகன புகை வெளியீடு சாதனத்திலிருந்து வரும் கார்பன் மோனாக்ஸைடு, ஆஸ்பால்ட் அல்லது சாலையை அமைக்கப் பயன்படுத்தப்படும் பெட்ரோலிய துணைப்பொருளான தார் மற்றும் நிக்கோட்டின் ஆகியவை இவற்றில் இடம் பெறுகின்றன. புகைப்பிடிக்கும் (நிக்கோட்டின்) அளவை படிப்படியாக குறைப்பதுடன் பாதிக்கப்பட்டோரை முழுவதுமாக அந்த பழக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சி மேற்கொள்வது அவசியம் எனவும் மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இளவயதினரே அதிகம்:இதுதொடர்பாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை வல்லுநருமான டாக்டர் கிருஷ்ணகுமார் ரத்னம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் மே31 ஆம் தேதி உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் 130 கோடி பேர் புகைப்பழக்கத்திற்கு ஆளானவர்களாக உள்ளனர். இவர்களின் 12 விழுக்காட்டினர் இந்தியாவில் மட்டும் உள்ளனர்.

இது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். அதிலும், குறிப்பாக இந்தியாவில் புகை பிடிப்பவர்களும் புகையிலையை பயன்படுத்துவோரும் மிக இளவயதினராக உள்ளனர். இதனால் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய தடையாக உள்ளது. மேலும் இளம் வயதிலேயே பலவிதமான நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகின்ற புகையிலை எதிர்ப்பு நாளை சிறுவயது குழந்தைகளை மையப்படுத்தியதாக இந்த ஆண்டுக்கான கருத்தியலாக அறிவித்துள்ளனர்.

புகையிலை பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கஞ்சா, கோகைனைவிட மோசம்:புகையிலை என்ற ஒரு விஷத்திலிருந்து இளம் தலைமுறையை காப்பாற்ற வேண்டும். அது என்ன விஷம் என்றால் நிக்கோட்டின் என்பது தான். புகையிலையில் உள்ள இந்த நிக்கோட்டின் என்ற பொருள் தான் அவர்களை போதை அடிமையாக மாற்றுகிறது. கஞ்சா உள்ளிட்ட பிற போதைப் பொருட்களை விட மிக மோசமானது இந்த நிக்கோட்டின். ஆகையால் இதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுக் கொண்டு வருவது மிக கடினமான ஒன்றாக உள்ளது.

இதற்கான அடிப்படைத் தீர்வு அவர்கள் அந்த பழக்கத்திற்கு ஆட்படாமல் முதலிலேயே தடுத்து விட வேண்டும் என்பதுதான். இந்திய அரசாங்கம் புகையிலைக்கு எதிராக பல்வேறு சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் நாம் கடைப்பிடிக்கின்றோமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. அந்த அடிப்படையில் தான் இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை மையப்படுத்தி மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

விழிப்புணர்வு ஒன்றே தீர்வு:பொதுமக்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நண்பர்கள் உறவினர்களிடம் புகைப்பழக்கத்தின் தீமைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதை அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களை எங்களைப் போன்ற மருத்துவர்களிடம் அழைத்து வந்து அதற்கான தீர்வினை பெற்றுச் செல்ல வேண்டும்.

புகையிலை பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கருவில் உள்ள சிசுவுக்கும் பாதிப்பு:புகையிலை பழக்கத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை விடுபடச் செய்ய பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. சைக்கோ தெரபியில் ஆரம்பித்து மாத்திரை மருந்துகள் வரை தேவையான அனைத்து சிகிச்சை முறைகளையும் அவர்களுக்கு வழங்க முடியும். குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகளிலேயே அவர்களின் உடல் நலத்தை மீட்டுக் கொண்டு வரலாம். இது புகைப் பழக்கத்தால் ஆட்பட்டவர்களுக்கு மட்டும் இது பிரச்சனை அல்ல. அவர்களை சுற்றியுள்ள நபர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை இரண்டாம் நிலை புகைப்பழக்க பாதிப்பு என்கிறோம்.

புகைப்பழக்கம் உள்ள நபர்கள் வெளியிடுகின்ற புகையால் சுற்றியுள்ள நபர்கள் மட்டுமின்றி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கிற சிசு கூட பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பக்கவாதம், மாரடைப்பு, வயிற்றுப் புண், சிறுநீரக பிரச்சனைகளோடு புற்றுநோயாலும் பாதிக்கப்பட வேண்டிய நிலை உருவாகிறது. இதனை எப்படியாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்.

இனியொரு விதி செய்வோம்:இதற்காக நமது அரசாங்கங்கள் சட்டம், விதிமுறை என பலவற்றைக் கொண்டு வந்தாலும், அதனை கடைப்பிடிக்க வேண்டியது நம் எல்லோரது கடமை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக சிறுவயது குழந்தைகளுக்கு ரூல்ஸ் என்றாலே பிடிக்காது. ஆனால் வேறு வழி இல்லை. அவர்களுக்கு பக்குவமாய் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. இதனை செயல்முறைக்கு கொண்டு வர வேண்டியது ஆசிரியர்கள் மட்டுமன்றி நண்பர்களின் கடமையும் கூட.

புகையிலை பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஏனென்றால் பெற்றோர்கள் ஆசிரியர்களை விட நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தான் மிக மிக அவசியம். மே 31 புகையிலை எதிர்ப்பு நாளை மனதில் கொண்டு உங்கள் நண்பர்களிடம் தொடங்கி அனைவரிடமும் இந்த பழக்கத்தின் தீமை குறித்து பேசுங்கள். அவர்களை நிச்சயமாக இந்த ரசாயன பொருளின் ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும். ஒரு நல்ல மனிதரை இந்த சமுதாயத்திற்கு கொண்டுவர நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கட்டாயம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 8 மில்லியன் நபர்கள் புகைபிடிப்பதோடு தொடர்புடைய நோய்களால் இறக்கின்றனர். இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்களை புகைபிடிக்கும் பழக்கம் கொல்கிறது. இந்நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை, புற்றுநோய் மற்றும் இதயநோய்களின் காரணமாக நிகழ்பவை. இந்த நோய்கள் ஏற்படுவதற்கு 4வது முன்னணி காரணமாக புகையிலைப் பயன்பாடே இருக்கிறது என்பதை நினைவில் கொள்வதே மே 31ஆம் நாளுக்கு நாம் தரும் மரியாதை.

இதையும் படிங்க: மூளையைத் தின்னும் கொடிய நோய்.. மீண்டு வர வழியில்லையா?- மருத்துவர் கூறுவது என்ன?

Last Updated : May 30, 2024, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details