காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில் 3700 ஏக்கர் பட்டா நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் ரூ.20,000 கோடியில் இந்த விமான நிலையம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விமான நிலையம் அமைக்க கூடாது என ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள், 900 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் விமான நிலைய திட்டங்கள் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கட்சி துவங்கியதிலிருந்து களத்திற்கு வரவில்லை என்று விஜய் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நலத்திட்ட உதவிகள் கூட பனையூர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் காஞ்சிபுரம் காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தனர்.
போராட்டக் குழுவினரை விஜய் சந்திக்க உள்ள இடம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இந்த இடத்தை நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். 19 மற்றும் 20 ஆகிய இரண்டு தேதிகளில் ஒரு தேதியில் அனுமதி தர வேண்டும் என தவெகவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்த வகையில் 20 ஆம் தேதி விஜய் வருவதற்கு காவல்துறையினர் அனுமதி கொடுத்துள்ளனர். இந்த தகவலை காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உறுதி செய்துள்ளார். இருந்தும் இன்று மாலை போராட்டக் குழுவினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களிடம் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆலோசனை மேற்கொண்ட பிறகு எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள்? நிகழ்ச்சி எவ்வாறு அமைய உள்ளது? என்பது குறித்து காவல்துறையினர் விளக்கம் கேட்க உள்ளனர்.
இதன் பிறகு விஜய் 20ஆம் தேதி வருவதற்கான அனுமதியை தர உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக மக்களை நேரடியாக களத்திற்கு சென்று விஜய் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.