தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை அமோனியா நிறுவனத்தில் கசிவா? மூச்சுத்திணறலால் மக்கள் அவதி; அதிகாரிகள் ஆய்வு! - ammonia leak - AMMONIA LEAK

திருநெல்வேலி செயல்பட்டுவரும் அமோனியா ஆலையில் கசிவு ஏற்பட்டதாகத் தகவல் பரவிய நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மலநாடு அமோனியா  ஆலை
மலநாடு அமோனியா ஆலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 5:17 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் இடைகால் அருகே அணைந்தநாடார் பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு மலநாடு அமோனியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 'திரவ அமோனியா' எனப்படும் வேதிப்பொருள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்நிறுவனத்தில் இருந்து அமோனியா எடுத்துச் சென்றபோது கசிவு ஏற்பட்டு காற்று மூலம் அமோனியா பரவியதாகவும், இதன் மூலம் அருகில் தோட்ட பணியில் ஈடுபட்டிருந்த சிலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வட்டாட்சியர் தலைமையில் குழு:இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் சபரிமல்லிகா மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் கணேசன் ஆகியோர் அமோனியா நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். விரைவில் இது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க உள்ளனர்.

பள்ளி அருகே செயல்படும் ஆலை:இந்த ஆலை செயல்படும் பகுதியிலிருந்து 50 அடி தூரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒருவேளை, அமோனியா கசிவு இங்கு ஏற்பட்டால் அந்த பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு, ஆலையை முறையாக ஆய்வு செய்து, அமோனியா கசிவு இருந்தால் மலநாடு ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

என்ன நடந்தது?கடந்த 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று அணைந்தநாடார்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென கண் எரிச்சல், வாந்தி போன்றவை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அவர் தனது தோட்டத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த அமோனியா ஆலையில் சென்று விசாரித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது 'அமோனியாவை நிரப்பும்போது சிறிய கசிவு ஏற்பட்டது என நிர்வாகம் தரப்பில் தனக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில், அணைந்தநாடார்பட்டி பகுதி மக்களும் அமோனியா கசிவு ஏற்பட்டதை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஐஏஎஸ் முதல் மண்டல அதிகாரி வரை.. வீட்டு வேலைக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்களா தூய்மைப் பணியாளர்கள்? - பகீர் புகார்!

ஆலை நிர்வாகம் விளக்கம்:இது குறித்து மலநாடு அமோனியா நிறுவனத்தின் மேலாளர் ஜோசப்பை ஈடிவி சார்பில் நாம் தொடர்பு கொண்ட போது, "மக்கள் எதை வைத்து அமோனியா கசிவு ஏற்பட்டது என கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் சோதனை செய்து பார்த்தவரை எங்கள் நிறுவனத்தில் அமோனியா கசிவு எதுவும் இல்லை.

அதிகாரிகளும் நிறுவனத்திற்குள் வந்து சோதனை நடத்தினர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை" என்று தெரிவித்தார்.

விரைவில் அறிக்கை தாக்கல்:இதனையடுத்து தொழிற் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் கணேசனை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்டபோது, "அமோனியா கசிவு ஏற்படுவதாக தகவல் தெரிந்தவுடன் உடனடியாக மலநாடு நிறுவனத்தில் ஆய்வு செய்ய ஆட்சியர் எங்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேரில் சென்று ஆய்வு நடத்தினோம்.

ஆனால் அமோனியா நிரப்பும் நேரத்தில் சோதனை நடத்தினால் தான் கசிவு இருக்கிறதா? என்று தெரியவரும். தற்போது அமோனியா நிரப்பும் நடைமுறைகள் அங்கு நடைபெறவில்லை. மீண்டும் அமோனியா நிரப்பும்போது ஆய்வு செய்யப்படும். அதேபோல் அருகில் உள்ள மக்களிடம் கருத்துக்களைக் கேட்டுள்ளோம். இது குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:"விசாரணை என்ற பெயரில் ஆசிரியர்களை மிரட்டுவதா?" - பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

அமோனியா பயன்பாடு என்ன?நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை மலநாடு நிறுவனம் மட்டும்தான் உற்பத்தி செய்து வருவதாகக் கூறப்படுகிறது இங்கு சராசரியாக 10 மெட்ரிக் டன் அமோனியா மாதம் ஒருமுறை நிரப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து அனுப்பப்படும் அமோனியா கேரளா, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இங்கிருந்து அனுப்பப்படும் அம்மோனியா பெரும்பாலும் குளிர்சாதன பொருட்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பால் கம்பெனி மற்றும் காய்கறி சேமிப்பு கடைகள் போன்றவற்றிற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதாவதாக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details