சென்னை:சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முன்னையத்தில் வெளிநாடு செல்லும் விமானப் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் நிலையில், இதன் தலைமை அலுவலகம் சென்னை சாஸ்திரி பவனில் உள்ளது.
இந்த பிரிவில் பணியாற்றுவதற்கு காவல்துறை, மத்திய உளவுத்துறையான ஐபி மற்றும் அரசு அதிகாரிகள், டெபிட்டேசன் முறையில் பணி அமர்த்தப்படுகின்றனர். இந்த நிலையில், அவ்வாறு டெபிட்டேஷன் முறையில் பணியமர்த்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன், கடந்த ஓராண்டாக சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் இம்மிகிரேஷன் அதிகாரியாக பணியாற்றினார்.
இந்நிலையில், இந்த இம்மிகிரேஷன் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடுகள் எதிலும் ஈடுபடாமல் சரியாக பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக, விஜிலன்ஸ் பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த விஜிலென்ஸ் பிரிவு கண்காணிப்பின் போது, இமிகிரேஷன் அதிகாரி சரவணன் மீது சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக, சரவணனை விஜிலென்ஸ் பிரிவு தீவிரமாக தொடர்ந்து கண்காணித்துள்ளது.
அப்போது சரவணன் வெளிநாடுகளுக்குச் செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதிக்கும் போது முறைகேடுகளில் ஈடுபடுவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுவதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக விஜிலென்ஸ் பிரிவினர் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள இமிகிரேஷன் தலைமை ஆணையருக்கு அறிக்கை அனுப்பினர். இதனால் சரவணனை இமிகிரேஷன் தலைமை ஆணையர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
பின் இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய குடியுரிமை தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள இமிகிரேஷன் பிரிவு தலைமை அலுவலகத்தில் இருந்து விரிவாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதோடு மத்திய உளவுப் பிரிவான ஐபியும் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இதேபோல் முக்கிய பிரிவில் இருக்கும் இமிகிரேஷன் குடியுரிமை அதிகாரிகள் போலி பாஸ்போர்ட் போன்றவைகளில் பயணிப்பவர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த இரண்டு குடியுரிமை அதிகாரிகளையும் விஜிலென்ஸ் பிரிவு மற்றும் ஐபி அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
மேலும், இதுகுறித்து தலைமை குடியுரிமை ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் பேரில் குடியுரிமை தலைமை ஆணையர் மேலும் இரண்டு குடியுரிமை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேரும் போலி பாஸ்போர்ட்களில் பயணிக்கும் பயணிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளதோடு, தங்கம் கடத்தலுக்கும் உடந்தையாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இதுதொர்பாக சுங்க அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களும் விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “புகார் எழுந்த 3 பேரின் செயல்பாடுகள் குறித்து விஜிலன்ஸ் அதிகாரிகளின் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்னர், சமீபத்தில் சிக்கிய 267 கிலோ தங்கம் கடத்தலுக்கும், இந்த இமிகிரேஷன் அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருகிறதா எனவும் விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதுகாப்பு வளையத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் குடியுரிமை அதிகாரிகளில் மூவர் போலி பாஸ்போர்ட்களில் பயணிப்பவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு கையும் களவுமாக பிடிபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 47வது முறையாக நீட்டிப்பு!