சென்னை:மூன்றாம் பாலினத்தவர்கள் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பாலின மாற்று அறுவை சிகிச்சை சான்றிதழ் தேவையில்லை எனவும், அரிதான வழக்குகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்.30) தெரிவிக்கப்பட்டது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை எதிர்த்து மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் என்ற அரசு சாரா அமைப்பைச் சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், "அறுவை சிகிச்சை மூலம் மூன்றாம் பாலினத்தவராக மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெற மருத்துவமனையின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்ற விதி, அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள சம உரிமைக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால், அறுவை சிகிச்சை சான்றிதழை இணைக்கக் கோரும் பிரிவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயற்கையிலேயே மூன்றாம் பாலினத்தவராக இருந்தால் அவருக்கு இந்த விதி பொருந்தாது, அதே நேரத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாறும் மூன்றாம் பாலினத்தவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் சான்றிதழ் கட்டாயம்”, என கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலின மாற்று அறுவை சிகிச்சை சான்றிதழ் தேவையில்லை எனவும், அரிதான வழக்குகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும் கூறப்பட்டது.
மேலும், ஆணா? பெண்ணா? என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பித்தால், உரிய காவல்துறை விசாரணைக்குப் பின் பாஸ்போர்ட் வழங்கப்படும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் பதிலைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. - Professor Nirmala Devi Case Verdict