சென்னை:கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் பழைய குற்றவாளிகள் இருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்த 2 நபர்களும் இக்குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன்பாக, சுமார் ஒரு மாத காலம் சென்னையில் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சென்னையில் இந்த நபர்கள் எங்கெல்லாம் தங்கி இருந்தார்கள்? எனவும், யாருடைய உதவியில் தங்கி இருந்தார்கள்? எனவும், யாரையெல்லாம் சந்தித்தார்கள்? எனவும் பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விவரங்களை சேகரித்து வந்தனர். இந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.